வரன் பார்த்த பெண்ணிற்கு விபூதி அடித்த நைஜீரியர்கள்; மேட்ரிமோனியல் மூலம் ரூ.4.5 லட்சம் அபேஸ்

மேட்ரிமோனியல் வெப்சைட்டில் வரன் பார்த்த சென்னை பெண்ணிடம் நான்கரை லட்ச ரூபாயை சுருட்டிய நைஜீரிய இளைஞர்கள் இரண்டு பேரை, டெல்லியில் வைத்து கைது செய்து இருக்கிறது தமிழகத்தை சேர்ந்த தனிப்படை போலீஸ். ஆப்ரேஷன் டி என்ற பெயரில் நடத்தப்பட்டு இருக்கும் இந்த அதிரடி கைது குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு….

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், மறுமணத்துக்காக மேட்ரிமோனியல் வெப்சைட்டில் வரன் பார்த்துள்ளார். அவரிடம், சலீம் என்ற பெயரில் அறிமுகமான நபர் ஒருவர், நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றுவதாக கூறி தன்னுடைய விவரங்களை அனுப்பி இருக்கிறார். தொடர்ந்து, இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு ஆன்லைன் காதலுக்கு நினைவாக அன்பு பரிசை அனுப்புவதாக சலீம் தெரிவித்ததை அடுத்து நெதர்லாந்தில் இருந்து வரப்போகும் பரிசுக்காக அந்த ஆர்வத்துடன் காத்திருந்தார். பின்னர், விமான நிலைய சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்த நபர் ஒருவர், அந்த பெண்ணுக்கு நெதல்லாந்து நாட்டில் இருந்து லேப்டாப், வைர நகைகள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வந்து இருப்பதாகவும், அதனை பெற வரி தொகையாக முதலில் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனை நம்பி மோசடி நபர் கொடுத்த வங்கி கணக்கில், அந்த பெண் 40 ஆயிரம் செலுத்திவிட்டு ஒரு கோடி ரூபாய் பரிசு பொருளுக்காக காத்திருந்தார்.

ஒரு கோடி ரூபாய்க்கான பொருட்கள் வராத நிலையில், மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மோசடி நபர், விமான நிலைய சரக்கு முனையத்தில் இருந்து பரிசு பொருட்களை வெளியே எடுத்து வரும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துவிட்டு, அந்த பொருட்களை பெற மேலும் நான்கு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு கோடி ரூபாய் பரிசு கண்ணை மறைக்க அவர்கள் கேட்ட பணத்தை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு காத்திருந்தார் அந்த பெண். ஆனால் நாட்கள் சென்றதே ஒழிய பரிசு பொருட்கள் வந்தபாடில்லை.

இந்த நிலையில் சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த மோசடி பேர்விழி, மீண்டும் 2 லட்ச ரூபாய் கேட்கவே, சந்தேகம் அடைந்த அந்த பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இது இது GIFT SCAM என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் மோசடி என தெரியவந்தது. இதேபோல், சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதனயைடுத்து அந்த மோசடி கும்பலை பிடிக்க போலீசார் “ஆப்ரேஷன் டி” என்ற பெயரில் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சென்னை பெண் பேசிய தொலைபேசி எண், அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கு, ஆகியவற்றை ஆய்வு செய்த போது டெல்லி துவாரகா அருகே மோசடி நபர்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்த போது அந்த வீட்டில் இருந்த தப்பியோட முயற்சித்த நைஜீரியர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, சென்னை பெண்ணிடம் பண மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், அவர்களை கைது செய்த போலீசார், இருவரிடம் இருந்து 10 ஏடிஎம் கார்டுகள், 15 செல்போன்கள், 4 லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நைஜீரியர்கள் இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர், தலைமறைவாகி இருக்கும் நிலையில், அவர்கள் சிக்கினால், மேலும் பல மோசடிகள் அம்பலமாகும் என்பதால், அவர்களை கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.

Exit mobile version