புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், ரத்த மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அங்கு நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களிலும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரளாவை சார்ந்த இளைஞருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சுற்றுலா வந்த அந்த இளைஞர், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், அவரது ரத்த மாதிரி, புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்தவுடன் அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.