தேனி மாவட்டம் கோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த 14 பேர், அண்மையில், துபாயில் கைது செய்யப்பட்டனர். துபாயில் 3 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இவர்கள் 14 பேரும் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டு டெல்லி காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிடிபட்டவர்களில் தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த மீரான்கனி, முகம்மது அப்சர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்களுடன் தொடர்பு இருப்பவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட மீரான்கனி மற்றும் முகமதுஅப்சர் ஆகியோரின் உறவினர்களின் வீடுகளில் சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவர் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை 3 மணி நேரம் நீடித்தது. மேலும், முகம்மது இப்ராகிமின் உறவினர் செய்யது அலி பாத்திமா வீட்டிலும் என் ஐ ஏ அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு சோதனை செய்தனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இவரது வீடு கடந்த 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததால், முஹம்மது இப்ராஹிமின் சகோதரர் முகம்மது ரஷீத், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பிரமுகர்களின் முன்னிலையில், வீடு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.