இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 20 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 9 லட்சத்து 7 ஆயிரத்து 282ஆக அதிகரித்துள்ளது. கடந்த 118 நாட்களில் இது மிக குறைந்த தினசரி தொற்று பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 2 ஆயிரத்து 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 784ஆக உயர்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 778 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், தொற்றில் இருந்து மீட்பு விகிதம் 97 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 39 கோடியே 46 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் சுமார் 2 கோடி தடுப்பூசி டோஸ்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
↕↕↕