முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதலமைச்சர் நேரடியாக மனுக்கள் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்தபடி மனுக்கள் பெறப்படாததால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி வந்த ஏராளமானோர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தது. முதலமைச்சரின் வருகைக்காக பந்தல், சிவப்புக்கம்பளம், பாதுகாப்புக்கு 100 காவல்துறையினர் என தடல்புடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சரிடம் நேரடியாக மனுக்கள் வழங்க, வழக்கத்தை விட கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் தலைமை செயலகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி, தலைமைச்செயலகம் முதல் ரிசர்வ் வங்கி வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனிப்பிரிவில் மனுக்கள் பெற அனைத்தும் தயாராக இருந்த நிலையில், துறைகளுக்குள் ஏற்பட்ட தொடர்பின்மை காரணமாக, நிகழ்ச்சி, ஆரம்பிக்காமலேயே முடிக்கப்பட்டது. முதலமைச்சர் நேரில் மனு வாங்குவார் என்ற அறிவிப்பை நம்பி, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கனவுகளோடு நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.
முதலமைச்சரிடம் நேரடியாக மனுக்கள் வழங்கவே நெடுந்தூரத்தில் இருந்து பயணம் மேற்கொண்டு வந்ததாகவும், இல்லையேல் இணைய வழியாகவே மனுக்களை வழங்கியிருப்போம் எனக் கூறினார் மாற்றுத்திறனாளி ஒருவர்..
தனது 95 வயதிலும் முதலமைச்சரை நேரில் பார்த்து, வறுமை, தனது குடும்ப சூழலை கூறி மனு வழங்கியே தீர வேண்டும் என்று தலைமை செயலகம் வந்திருந்த சுதந்திர போராட்ட வீரர் சுந்தரத்திற்கும் ஏமாற்றமே மிச்சம்…
முதலமைச்சரை பார்த்து மனு கொடுக்க முடியாததால் மனவேதனை அடைந்ததாக தெரிவித்த அவர், தியாகிகளுடன் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை காட்டியவாறே கோட்டையை விட்டு வேதனையோடு வெளியேறினார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் இது குறித்த செய்தி வெளியான நிலையில், அனைத்து கட்சி கூட்டம் முடிந்த கையோடு, மனு வாங்க வேண்டுமே என்று அவசர அவசரமாக தனிப்பிரிவுக்கு வந்த ஸ்டாலின், பெயருக்கு, மனுவை வாங்கிவிட்டு நைசாக நழுவி விட்டார்.
வெற்று அறிவிப்பாலும், முதலமைச்சரின் செயலாலும், கால்கடுக்க காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்போம், குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவிரிக்கும் திமுகவின் பாணி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு வாங்கப்படும் என்ற அறிவிப்பிலும் நிகழ்ந்துள்ளதாக கூறி கலக்கத்துடன் திரும்பினர் பொதுமக்கள்…
மேற்கண்ட செய்தியில் அலைகழிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளான பொதுமக்கள் தரும் குற்றச்சாட்டு பேட்டியை காண
⬇⬇⬇
Discussion about this post