நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனாரின் 133வது பிறந்த நாள் இன்று- ''காந்தியக் கவிஞர்'' வாழ்க்கைப் பாதையை வருணிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனாரின் 133வது பிறந்த நாள் இன்று… காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்ட நாமக்கல் கவிஞரின் வாழ்க்கைப் பாதையை வருணிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

நாஞ்சில் நாட்டு நற்றமிழ்த் தென்றலாய் 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தோன்றியவர் ராமலிங்கனார்.

((தம் பெற்றோருக்கு 8வது மகனாகப் பிறந்த ராமலிங்கனார், காவல்துறையில் பணி செய்த தந்தையால், நாட்டுப் பற்றும் துணிச்சலையும் இயல்பிலேயே பெற்றார். அதன் விளைவாக விடுதலை இயக்கத்தில் தம்மை விதைத்துக் கொண்ட இவர், இந்தியாவின் விடுதலைக்காக முழு மூச்சுடன் உழைத்தார். இவருடன் சமகாலத்தில் சேர்ந்து உழைத்த மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமை – மகாகவி பாரதியார். ))

பாரதியார் கவிதைப் பரம்பரையின் நீட்சியாக சம காலத்திலேயே வலம் வந்த ராமலிங்கம், சொற்சுவை ததும்பும் கவிதைகளை, சொக்கிடச் செய்யும் சந்தங்களை இழைத்துப் பாடும் திறமை பெற்றவர். சமுதாயப் பற்று, தேசப் பற்று என்பவற்றோடு மொழிப்பற்றும் உயர்ந்து விளங்கியவர். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இன்றைய இளைஞர்களின் எழுச்சி வாசகத்தை உதிர்த்த உதடுகள் ராமலிங்கனாருடையதே.

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட ராமலிங்கனார், இயல்பிலேயே தமக்கிருந்த சாந்த குணத்தால் முழு அகிம்சை வாதியாக வாழ்ந்து வந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பியது, ராமலிங்கனார் எழுதிய பாடல் வரிகள்தாம். கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது… சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்று அப்போது பாடாத வாயில்லை. அதில் நெஞ்சுரம் அடைந்து சுதந்திரப் போர்க்களம் நோக்கி நடக்காத காலில்லை.

தம்மை இந்தியாவின் விடுதலைக்காக முழுதும் அர்ப்பணித்த ராமலிங்கனார், தமிழர் அடையாளம் என்று வரும்போது எப்போதும் தனி மிடுக்குடன் தம் கவிதைகளைப் பொழியலானார். “தமிழன் என்றோர் இனமுண்டு… தனியே அவர்க்கோர் குணமுண்டு… அமிழ்தம் அவரது மொழியாகும்… அன்பே அவனது வழியாகும்” என்று பாடி தமிழர்களின் அடையாளத்தைத் தரணி எங்கும் நிலைக்கச் செய்தார். இவரது மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் உள்ளிட்ட நாவல்கள், காலத்தால் அழியாத ரசிகர் படையைக் கொண்டதாகும். 3 இசை நாவல்கள், 5 புதினங்கள், 7 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், 10 கவிதைத் தொகுப்புகள் என்று எழுதிக் குவித்த இமயமாக ஒளிந்தவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்.

மகாகவி பாரதியாரால் “பலே பாண்டியா பிள்ளை! நீர் ஒரு புலவர் ஐயம் இல்லை” என்று பரவசமாக பாராட்டப்பட்ட நாமக்கல் கவிஞரின் கவிதைகள், தமிழ்க் கவிதை உலகத்தில் நிஜமான நித்திலங்கள் ஆகும்.

மேலே படித்த தொகுப்பை காட்சிப்பதிவுகளுடன் கேட்க

 

Exit mobile version