ஒரு அமைச்சர் ஆய்வு செய்யப்போனால், அந்த தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உடன் இருக்க வேண்டும் இது அரசாங்க ப்ரோட்டோகால்… சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்எல்ஏ எதிர்க்கட்சி என்றால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரை ஒதுக்கிவிடுகிறார்கள் … ஆனால் சொந்தக்கட்சி எம்பியையே புறக்கணிக்கிறார்கள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? அதுவும் தன் சொந்த அத்தையையே புறக்கணிக்கிறார் என்றால், அதற்குப்பின்னால் ஓர் பெரும் பரம ரகசியமே ஒளிந்திருக்கிறது என்றுதானே புரிந்துகொள்ள வேண்டும்?
கடந்த 4ம்தேதி, ஆட்சி மற்றும் கட்சி ரீதியான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி சென்றார் வாரிசு அமைச்சர் உதயநிதி… அவர் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியிலுமே, அந்த தொகுதியின் எம்பியான கனிமொழி கலந்துகொள்ளவே இல்லை… அவர் அழைக்கப்படவே இல்லை… வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.. வெறும் இளைஞர் அணியினர் நிகழ்ச்சியில் என்றால்கூட பரவாயில்லை விட்டுவிடலாம். ஆனால் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஆகியோருடன், அந்தப்பகுதியைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இத்தனை பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் ஒரு எம்பி என்ற அடிப்படையிலும், கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலும் கனிமொழி ஏன் புறக்கணிக்கப்பட்டார்? அவர் கலந்துகொண்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டிருக்கிறாரா உதயநிதி?
தொடர்ந்து கனிமொழியின் ஆதரவாளராக இருந்த காரணத்தால் அமைச்சரான கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மேயரான அவரின் சகோதரர் ஜெகன் ஆகியோர் கூட தற்போது அவரை புறக்கணித்திருப்பதை பார்க்கும்போது, ஏதோ ஒரு பெரும் பூகம்பமே கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் இளைஞர்அணியில் பெண்களை சேர்க்கும் விவகாரத்தில் உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே நடந்த முட்டல் மோதல்கள் ஆறுவதற்குள், தூத்துக்குடிக்கே வந்து கருணாநிதியின் வாரிசை ஒரண்டை இழுத்திருக்கிறது ஸ்டாலினின் வாரிசு…
இதையெல்லாம் கவனித்த கனிமொழியோ திரைமறைவில் சில விஷயங்களை செய்ததால்தான் உதயநிதியின் பொதுக்கூட்டத்திற்கு கூட்டமே இல்லாமல் சேர்கள் எல்லாம் காத்துவாங்கியிருக்கின்றன.. இதைப்பார்த்து காண்டு ஆகி நிகழ்ச்சியை பாதியில் முடித்துவிட்டுச் சென்றிருக்கிறார் வாரிசு… ஏற்கனவே, அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா எம்பி இடையிலான மோதல்களைத் தொடர்ந்து அடுத்த அமைச்சர்-எம்பி மோதல் தொடங்கியிருப்பதாகவே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
ஆக மொத்தத்தில் அத்தைக்கும் அண்ணன் மகனுக்கும் இடையிலான அதிகாரப்போட்டி வீதிக்கு வந்துவிட்டதா? கருணாநிதியின் வாரிசை முடக்கநினைக்கிறாரா ஸ்டாலினின் வாரிசு? நிலைமை இப்படியே இருந்தால் சொந்தக்கட்சிக்குள்ளேயே பெண்களின் ஆதரவை இழந்துவிடுவாரா ஸ்டாலின்? தன் தங்கைக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப்போட்டியை முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலினின் நிலைமை பார்த்துத்தான் அவரின் நிர்வாகத்திறமையை கழுவி ஊத்துகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
Discussion about this post