தாத்தா, அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்,
மகள், மருமகன், அக்கா மகன், அவர் மகன்கள்,
பேத்தியின் கணவர், பேரனின் மனைவி … அப்பப்பாஆஆஆஆ.. இது என்னப்பா? “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற தலைப்பில் நாவலோ? என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.. இது கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்து திமுகவில் ஆதிக்கம் செலுத்துவோரின் உறவு முறைகள்..
கருணாநிதிக்கு பிறகு, ஸ்டாலின் எப்படி அடுத்த ராஜாவானாரோ அதேபோல, தனக்கு அடுத்து பட்டத்து இளவரசராக உதயநிதியை கொண்டுவந்துவிட்டார் ஸ்டாலின்…. ஆனால், கருணாநிதியின் இன்னொரு வாரிசான கனிமொழியால் எங்கே உதய்க்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பல்வேறு காய் நகர்த்தல்களை செய்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின்… உதயநிதியை முன்னிலைப்படுத்தி, கட்சியினரை உதயநிதிக்கு கும்பிடு போட வைப்பது என்று திமுகவையே தற்போது தன் மகனுக்கு எழுதிவைத்திருக்கிறார். இதுபோதாதென்று, சில நாட்களுக்கு முன்னர் ஹாக்கி மைதான துவக்கவிழாவில், இன்பநிதியை அறிமுகம் செய்து வைத்து அவருடைய அரசியல் வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போட்டார்.. இதைப்பார்த்த உடன்பிறப்புக்களோ உடனடியாக இன்பநிதிக்கு பாசறை தொடங்கி பாச மழை பொழிந்துவிட்டனர்..
அடடே.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.. நாம என்ன செஞ்சாலும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று, தன் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனை எப்படி திமுகவிற்குள் உச்சாணிக்கொம்பில் உட்காரவைத்தாரோ அதேபோல, தன் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியையும் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்க வைத்து, அடுத்த வாரிசுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்… உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழக அரசின் சமூகநலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிறார் உதயநிதியின் மனைவி கிருத்திகா..
திடீரென்று கிருத்திகாவை களத்தில் இறக்க என்ன காரணம்? என்று யோசித்து மண்டையை பிய்த்துக்கொள்ளாதீர்கள்.. இதற்கு ஒரே ஒரு காரணம்தான்.. கனிமொழி.. ஆம், உதயநிதி – கனிமொழி இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் முற்றிக்கொண்டிருப்பதால், கனிமொழிக்கு பயம்காட்ட கிருத்திகா உதயநிதியை வைத்து காய் நகர்த்துகிறது ஸ்டாலின் குடும்பம்.. எப்படி ஸ்டாலின் மனைவி திமுகவிற்குள் கிச்சன் கேபினட் நடத்திக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல, உதயநிதி நாளை தலைமைக்கு வரும்போது, ஆதிக்கம் செலுத்த இப்போதே டிரெய்னிங் எடுக்கிறார் உதயநிதியின் மனைவியார்..
ஒரு அமைச்சரின் மனைவி, அரசுத்திட்டத்தை தொடங்கிவைக்கவோ, நடத்தவோ எந்த அரசியலமைப்புச்சட்டம் வழி வகுக்கிறது? உதயநிதியை தொடர்ந்து அவர் மகன் இன்பநிதி, மனைவி கிருத்திகா என்று வரிசையாக வந்தால் கடைக்கோடி திமுக தொண்டர் வெறும் போஸ்டர் மட்டும் தான் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா? கனிமொழி Vs உதயநிதி என்ற போட்டி, இனிவரும் காலங்களில் கனிமொழி Vs கிருத்திகா என்று மாற்ற திட்டம் போடுகிறாரா ஸ்டாலின்? ஸ்டாலினின் இத்தகைய வாரிசு அரசியல் போக்கால், திமுகவிற்குள்ளேயே கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஸ்டாலின்-அழகிரி சண்டைபோல, உதயநிதி-கனிமொழி மோதல், கனிமொழி – கிருத்திகா சண்டை என்று வாரிசுச்சண்டையால் வெகுவிரைவில் உடையப்போகிறது திமுக என்பது மட்டும் தெளிவாகிறது.