சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை, ஜீன் 13க்கு முன் ஜீன் 13க்குப் பின் என்றுதான் பிரித்துப்பார்க்க வேண்டும். ஒரு 100 நாட்களுக்கு முன்வரை தமிழகத்தில் செந்தில்பாலாஜியும், கரூர் கம்பெனியும் போட்ட ஆட்டம் என்ன? கட்டிய கூத்து என்ன? ஈரோடு இடைத்தேர்தலில் செய்த சேட்டைகள் என்ன? அப்பப்பா.. சொல்லிமாளாத அளவுக்கு தமிழகத்தையே சோதித்த செந்தில்பாலாஜியின் சோலியை முடிக்கும் பேரதிர்ச்சி நடந்தது…
அட அதுதாங்க.., செந்தில்பாலாஜி வீட்டு ரெய்டு மற்றும் அவரின் கைது.. அந்த அற்புதம் நடந்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும், அண்ணன் வெளியே வந்து மீண்டும் கரூர் கம்பெனியின் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் கனாக்கண்டுகொண்டிருந்த அண்ணனின் விழுதுகளை ஏமாற்றிவிட்டது ஜாமீன் மறுப்பு என்ற நீதிமன்ற தீர்ப்பு.. நல்லவேளை, ஜாமீன் மட்டும் கிடைத்திருந்தால், 100வது திருட்டுக்கு வாழ்த்துக்கள் என்று வடிவேலுக்கு போஸ்டர் அடிக்கும் சினிமா காமெடிபோல, செந்தில்பாலாஜியின் 100 நாள் புழல் வாசத்திற்குக்கூட போஸ்டர் அடித்திருப்பார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்…
வயித்தக்கட்டி வாயக்கட்டி சம்பாரித்த ஏழை எளிய மக்களின் பணத்தை வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லி ஆட்டையைப் போட்டது,, பாட்டிலுக்கு 10 ரூபாய் கொடு என்று கந்துவட்டிக்காரர்போல வசூல் செய்வது என்று திமுகவின் குபேரனாக வலம்வந்த செந்தில்பாலாஜியை விடாது துரத்துகிறது ஐடியும், அமலாக்கத்துறையும்… ஆனால் எங்கள் செந்தில்பாலாஜியைத் தொட்ட நீ கெட்ட… என்று தொட்டுப்பார் சீண்டிப்பார் பஞ்ச் டயலாக் அடித்த முதல்வர் ஸ்டாலினால் புழல் சிறையில் பாலாஜியின் 100நாள் வெற்றிவிழாவை கொண்டாட, குலாம்ஜாமூன் வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியுமேதவிர ஜாமீனை வாங்கித்தர முடியவில்லை…
இதில் இன்னும் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், முதலில் காசு வாங்கி ஏமாற்றிய கேஸ்-ல் தான் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை சுற்றி வளைத்தது.. ஆனால் தற்போது, டாஸ்மாக் ஊழல், மின்சாரத்துறை ஊழல் என்று கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஒவ்வொரு ரெய்டாக லைன் கட்டி வந்து செந்தில்பாலாஜிக்கு சுத்துப்போட்டிருக்கிறது ..
ஆனால், இவ்வளவு பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்க, பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்ற கணக்காக, செந்தில்பாலாஜி எங்களுக்கு அமைச்சராக இருக்கத்தான் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒற்றைக்காலில் நிற்காத அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்…
ஆக, கைதுசெய்யப்பட்டு 100வது நாளை இன்று கொண்டாடும் செந்தில்பாலாஜி, அடுத்ததாக, வெள்ளிவிழா, ஆண்டுவிழாவையெல்லாம் கொண்டாட்டப்போகிறார் என்பது ஒருபக்கம் தெளிவானாலும், செந்தில்பாலாஜியின் “அந்த 100 நாட்களில் நடந்தது என்ன? என்ற கேள்விதான் உள்ளூர ஒலித்துக்கொண்டே இருக்கிறது…
– இணையாசிரியர் மனோஜ்குமார் கோபாலன்
Discussion about this post