சிங்காரச் சென்னை திட்டத்தின் பெயரால் பங்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை அகதிகளாக்கி, அடித்தட்டு மக்களின் வாழ்வை சூறையாடும் திமுகவின் திராவிட மாடல் குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்!
பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு என்னும் பெயரில், ஆட்சியாளர்கள் தங்களின் கோரமுகத்தை இன்னுமொரு முறை காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் வாரிசு அமைச்சரின் தலைமையில் பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை முதல் ஆர்.கே.மடம் வரை உள்ள 2,900 மீட்டர் நீளமுள்ள கால்வாய் பகுதியினை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து மறுசீரமைப்பு மேற்கொள்கிறது. இதற்காக அந்தப் பகுதியில் முதற்கட்டமாக 1200 குடியிருப்புகள் அகற்றப்படுகிறது.
மறுசீரமைப்பு என்னும் பெயரில் கிட்டத்தட்ட 1200 குடும்பங்களை குப்பையைத் தூக்கி வீசுவதுபோல அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது விடியா திமுக அரசு.
அன்றாடம் காய்ச்சிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என்று கிட்டத்தட்ட சென்னையின் பூர்வகுடிகளாய் பல தலைமுறைகளாய் வசித்து வரும் அந்த சாமானிய மக்களை, அங்கிருந்து அகற்றி அகதிகளாக்குகிறது, திமுக அரசு. சிங்காரச் சென்னை என்னும் திட்டத்தின் பெயரில் அவர்களின் வாழ்விடத்தைப் பறித்துக் கொண்டுள்ளது.
மறுசீரமைப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை… பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் எதுவும் இல்லை… கடலில் பேனா சிலை வைப்பதற்காக நடத்திய கண்துடைப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் கூட நடத்தப்படவில்லை…
சென்னை மெரினாவில் லூப் சாலையில் இருந்து மீனவர்களை துரத்தி அடித்தது போல, இப்போது மறுசீரமைப்பு திட்டத்தின் பெயரில் அடித்தட்டு மக்களின் வாழ்வினை சூறையாடுவதில் திமுக இறங்கியிருக்கிறது.
பக்கிங்காம் கால்வாயை அகலப்படுத்துகிறார்களா? ஆழப்படுத்துகிறார்களா? இதை மறுசீரமைப்பதற்கு என்ன முக்கியத்துவம் என்றால், திட்டத்துக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் எண்ணப்படியே சென்னையை வடிவமைப்பதில் விடியா அரசு முனைப்பு காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்த 250 குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு அகற்றுவதாகக் கூறி ஏழை எளிய மக்களை நிர்க்கதியாக்கியது. தற்போது பக்கிங்காம் மறுசீரமைப்பு என்னும் பெயரில் முதற்கட்டமாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 1200 குடும்பங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டுள்ளது விடியா அரசு.
இப்படி சிங்காரச் சென்னை திட்டத்தின் பெயரால் ஏழை மக்களின் வாழ்விடத்தை பறிப்பதும், சென்னையின் பூர்வகுடிகளை அகதிகளாக்குவதும், அடித்தட்டு மக்களின் வாழ்வை சூறையாடுவதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், இந்த ஆட்சியையும் மறுசீரமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் உறுதியுடன்!
Discussion about this post