மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா காங்கிரஸ் உறுதியாக கூறியிருக்கும் நிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை ஸ்டாலின் அடகு வைக்கப்பார்க்கிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
ஆட்சிப்பொறுப்பேற்று இன்னும் ஒருமாதம் கூட ஆகவில்லை.. ஆனால் தமிழகத்தை ஒரண்டை இழுக்கிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி… என்னதான் கர்நாடகா மாநிலத்தில் உருவானாலும், 4 மாநிலங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே 4 அணைகள் இருக்க, தற்போது, மேலும் ஒரு அணையை கட்டியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு…. மேகதாது அணை எங்கள் உரிமை என்று கர்நாடகாவின் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் முழங்கியிருக்கிறார். ஆனால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரான துரை முருகனுக்கு இதெல்லாம் தெரியுமா என்பதே சந்தேகம்தான்.
கர்நாடகா அரசு இப்படி களேபரம் செய்துகொண்டிருக்கும் வேளையில், டி.கே.சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் நேரில் சென்று வாழ்த்துச்சொன்ன ஸ்டாலின், மாறி மாறி ஃபோன்பண்ணி வாழ்த்துச்சொன்ன ஸ்டாலின் இன்று ஏன் வாய்மூடி நிற்கிறார்? ஒரு மிஸ்ட்டு கால் கொடுக்கக்கூட பேலன்ஸ் இல்லையோ?
பெங்களூர் மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டம், பெங்களூரு நகரத்திற்கு மின் உற்பத்தி செய்யும் திட்டம் என சில தேவைகளுக்காக மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா அரசு. அப்படியானால் தமிழ்நாடு என்ன இளிச்சவாயா? காவிரியில் நமக்கு உரிமையில்லையா?
சீனாவில் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டிய அணைகளால் அந்நாட்டின் சமவெளி மற்றும் டெல்டா பகுதிகள் பாலை நிலமாக மாறியதைப் போல, தமிழகத்திலும் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாலைவனமாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர் நம்ம ஊர் விவசாயிகள்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு இப்படி செயல்பட்டுக் கொண்டு இருக்க, மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசை நம்பி எந்த பயனும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். புரட்சித்தலைவி காலம் தொட்டு, எடப்பாடி கே பழனிசாமி வரை காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து, கடும் போராட்டங்களுக்குப்பிறகு தமிழக உரிமைகளை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது, மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருப்பதில் இருந்தே, தமிழ்நாட்டில் உரிமைகளை எப்படியெல்லாம் தாரைவார்க்கிறது இந்த விடியா அரசு என்பது அம்பலம் ஆகிறது..
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசை எதிர்க்கத் துணிவாரா? தேசிய அரசியலில் தான் இருக்கிறேன் என்று வெறும் விளம்பரம் செய்து கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிய வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Discussion about this post