அரசு போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க துடிக்கும் விடியா திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் நாடகமாடுவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அரசு பேருந்துகளை நம்பியே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி அரசு பேருந்துகளை நம்பியிருப்பவர்கள் தலையிலும், அரசு போக்குவரத்துகழக ஓட்டுநர்கள் தலையிலும், தனியாருக்கு ஆதரவான நிலைப்பாட்டால், ஓங்கி குட்டி இருக்கிறது ஆளும் திமுக அரசு.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசுத்துறைகளில் தனியார் மயத்தை புகுத்தி வருகிறது. அதன் முதற்படியாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் நியமனத்திலும் தனியாரைப் புகுத்த அதற்காக டெண்டர் விட முயன்று வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 400 ஓட்டுநர்களை நியமிக்கு இலக்கு வைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசின் இந்த முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தான் மூன்று நாட்களுக்கு முன்பு மாலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.சவும் ஆளும் அரசின் தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு காட்டியது.
சென்னையில் மாநகரப் பேருந்துகளை திடீரென இயக்காமல் நிறுத்தியதோடு, பணிமனைக்கே கொண்டு சென்றதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகவும் அல்லாடினர். ஓட்டுநர்கள் உள்பட இதர போக்குவரத்து துறை தொழிலாளர்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் போராட்டத்தின் போது எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது.
இப்படி திமுகவின் தொழிற்சங்கமே போராட்டத்தில் ஈடுபட்டதால் கலவரமடைந்த தலைமை, பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதன் பின்னர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினருடன், திமுக அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்ததால், வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, திமுகவின் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களில் ஒன்றான சி.ஐ.டி.யு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்…
போக்குரவத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்தால் திமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை ஒரு பேருந்தை கூட அரசு வாங்காமல், 11 முறை டெண்டர்கள் அறிவிக்கப்பட்டும் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன. போக்குவரத்தில் தனியார் மயம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடைகள் நிலுவை, பணியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமை என்று போக்குவரத்து துறை ஊழியர்களின் குறைகளையும் திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் குறைகளை களைய முயற்சி செய்யாமல் தனியார் மயத்தை புகுத்தவே திட்டமிட்டு கொண்டிருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடிக் கொண்டிருப்பது உண்மைதான் என்கிறார்கள் கள நிகழ்வுகளை கூர்ந்து நோக்குபவர்கள்.
Discussion about this post