2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி வியூகத்தை வகுக்க தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நேரம், தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தை பார்த்த ஒட்டுமொத்த மக்களின் கண்களும் எடப்பாடி கே பழனிசாமி மீதே இருந்தது.. காரணம், கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி அசோகா ஓட்டல் வாயிலில் பூச்செண்டு கொடுத்து வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகிலேயே இடம் தரப்பட்டது. அது மட்டுமின்றி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டு, தென்னிந்திய பிரதிநிதியாகவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இப்படி தென்னிந்திய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டது, கூட்டத்தில் அருகே அமர வைத்தது, 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசிக் கொண்டிருந்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி அளிக்கும் முக்கியத்துவம் தற்போது தமிழக அரசியல் அரங்கில் பேசு பொருளாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளைத் திரட்டுகிறோம் என்று பிரதமர் கனவோடு மாநிலம் மாநிலமாக ஸ்டாலின் அலைந்து கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், ஸ்டாலினின் கனவுக் கோட்டைக்கு குண்டு வைத்துள்ளது. மேலும் சில இளவு காத்த கிளிகளான நம்பிக்கைத் துரோகிகளின் கனவுகளையும் தவிடுபொடியாக்கி உள்ளது. இன்னும் தெளிவாக, தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்…
அதே நேரம் பெங்களூருவில் நடைபெற்ற I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு கிடைக்காத அங்கீகாரத்தையும் தமிழக மக்கள் உற்றுநோக்கி வருகின்றனர். ஆக தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக உருவாகி இருப்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றனவா?
ஆக தேசிய ஜனநாயகக் கூட்டணியான NDA மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A இடையே நாடாளுமன்ற யுத்தம் தொடங்கிய நிலையில், தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக உருவாகி இருப்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.