மருத்துவர்களின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனைக்கு வந்த பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்டு குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற அரசு மருத்துவமனை அவலங்களால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போகிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்டிருக்கிறது. கை நரம்பின் வழியாக மருந்துகளை செலுத்துவதாக சொல்லி, ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் அரசு மருத்துவமனை செவிலியர்கள். கையின் நிறம் மாறுவது குறித்தும் குழந்தை அழுவது குறித்தும் அதன் தாய் தெரிவித்தும் அலட்சியம் காட்டியிருக்கிறார்கள். அதன் விளைவு, ஒரு கட்டத்தில் குழந்தையின் கை அழுகிவிட, தங்களின் தவறுகளை மறைக்கும் விதமாக, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, அவசர அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இரவோடு இரவாக குழந்தையை அனுமதித்து, அந்த கையையே அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
செவிலியர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால், பச்சிளம் சிசு இன்று தனது ஒருகரத்தை இழந்திருக்கிறது. பெற்ற தாயின் மனம் பரிதவிக்கிறது. ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா என்னும்படி நீதி கேட்டு எழுந்துள்ள பெற்றோரின் கூக்குரல் எதுவும் அரசின் செவிகளில் விழவில்லை. வழக்கம்போல உண்மையை மூடி மறைக்கும் பணியில் விடியா திமுக அரசு இது எதனையும் ஏற்கமறுத்து, விசாரணை நடத்துவதற்காக மருத்துவக் குழு ஒன்றை ஏற்படுத்தியதாகதாக சொல்லி கைகழுவியது. அரசின் வழிகாட்டுதலில் அந்த மருத்துவக் குழுவும், விசாரித்துவிட்டதாக சொல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை மீது எவ்வித தவறும் இல்லை என்று கூறியிருக்கிறது.
குழந்தையின் பெற்றோர் அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என நம்பிய நிலையில், குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் வகையில் அரசும், அரசு அமைத்த மருத்துவக் குழுவும் செயல்பட்டிருக்கிறது என்பது வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறாக சிகிச்சை அளித்த நிலையில் கால் அகற்றப்பட்டு அவர் மரணித்தது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசு மருத்துவமனையில் போதிய அனுபவமற்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லாதது என பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இத்தகைய துயரம் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
விடியா ஆட்சியில், இதற்கு எப்போது தான் தீர்வு? என பொதுமக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பதோடு, அரசு மருத்துவமனையா ஐயோ வேண்டாம் என்று அச்சம் கொள்ளும் நிலைக்கு அரசு மருத்துவமனையின் தரம் இன்றைக்கு சென்றிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளையும், அவர்கள் அளிக்கும் சிகிச்சைகளையும் மறைமுகமாக ஊக்குவிக்கும் வகையில் இந்த திமுக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறதா?
மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சைக்குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனை அவலங்களால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போகிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Discussion about this post