நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. நாட்டில் வாழும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது. அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அந்த அதிகாரத்தை நீர்த்துப்போகவேச் செய்கிறார்கள். ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடத்தொடங்கினால், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்கிற கருத்து, கேலிக்கூத்தாக மாறிவிடும். திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து நான் கண்களை மூடிக் கொண்டிருந்தால் கடமைதவறி விடுவேன்… இப்படி பரபரப்பான ஒரு ஸ்டேட்மெண்டை வெளிப்படுத்தியிருந்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙக்டேஷ், சுமோட்டோவாக எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால், பதறிப் போன திமுக கூடாரத்தில் இருந்து, பழிசுமத்தியிருக்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. திமுக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நீதிபதி மேற்கொள்வதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூப்பாடு போட்டு விமர்சித்திருக்கிறார்.
இதே ஆர்.எஸ்.பாரதி, திமுக போட்ட பிச்சையினால்தான் நீதிபதியாகி இருக்கிறார்கள் என்றதும், கருணாநிதி போட்ட பிச்சைதான் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியதும் திமுகவினரின் அராஜகத்தின் பதிவாகி இருக்கிறது.
ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் சலசலப்பு எதனையும் கண்டுகொள்ளாத நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன் மீது இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அதுபற்றி தான் கவலைப்படப்போவது இல்லை என்று தெரிவித்திருப்பது திமுகவினரை விழி பிதுங்க வைத்திருக்கிறது.
அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணைகள் நடந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையால், தங்களால் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்து விடுதலையாக முடியாது என்னும் அச்சமே இப்படி எல்லாம் திமுகவை பதற வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இப்படி நீதிபதியை விமர்சிக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி குறித்தும், நீதிபதியையே மன உளைச்சலுக்கு ஆளாக்கிய திமுக அமைச்சர்கள் தொடர்பாகவும், ஊழல் செய்து மாட்டிக்கொண்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் திமுகவுக்கு, உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியிலும் அது பேசு பொருளாகி இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் அதன் வெளிப்பாடு எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
Discussion about this post