தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் பட்டை தீட்டி பில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சி அரசு மருத்துவமனைக்கு நம்பி வரும் ஒவ்வொரு குடிமகனையும் பதறி அடித்து ஓடவைக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது விடியா திமுக அரசு…..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தனிஷ் – ஷைனி தம்பதியினர் தங்களின் 3 வயது குழந்தையை காய்ச்சல் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கு குழந்தைக்கு சோதனை செய்யாமலேயே வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் அளித்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், குழந்தையின் உடலில் அசைவுகள் தென்பட்டதால், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த நிலையில், குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது.
கேரளாவில் குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. அப்படியே தமிழக அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சொல்வதை கேட்டிருந்தால் ஒரு உயிர் என்னவாகி இருக்கும்….குழந்தை என்பதால் அக்கறை இல்லையா அல்லது எந்த ஒரு உயிருக்கும் தமிழக அரசு மருத்துவமனையில் மதிப்பில்லையா? என்ற கேள்விகளைத்தான் மக்கள் எழுப்புகின்றனர்….
இந்த சம்பவத்தை பற்றி அறிந்த எதிர்க்கட்சித் தலைவர், சமீப காலங்களாக தமிழக அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் குறித்தும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் தனது அறிக்கை வாயிலாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, கடந்த 10 ஆண்டுகாலத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தததை இரண்டே ஆண்டுகளில் செய்து சாதித்துவிட்டதாக சுய தம்பட்டம் அடித்திருக்கிறார்….மக்கள் அனைவரும் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் நடக்கும் அவலங்களை பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றனர்….
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டது தொடங்கி சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம் என சுகாதாரத்துறை அமைச்சரின் சாதனை பட்டியல் நீள்கிறதே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
சுகாதாரத்துறையை சீர்படுத்த வேண்டிய அமைச்சரே, இப்படி தவறுகளுக்கு எல்லாம் ஆதரவாக நின்றுகொண்டு இருந்தால், அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் இல்லாமலேயே போய்விடாதா?
தனது உடற்பயிற்சிக்கு செலவிடும் நேரத்தைப் போலவே, சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைக்கு செலவிட்டு மக்களின் இன்னுயிரை காக்க வழி செய்வாரா?….இனியாவது ஏழை எளியோரும் நம்பிக்கையுடன் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அரசு மருத்துவமனைகள் இருக்குமா? என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.
Discussion about this post