ஒரு எதிர்க்கட்சித்தலைவரை பேச விடமாட்டேன் என்பதெல்லாம் ஜனநாயகமா? அராஜகத்தின் உச்சமல்லவா? எதிர்க்கட்சித்தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்குங்கள்…. மக்கள் எதிர்க்கட்சிகளின் குரலை கேட்க வாய்ப்பு தராமல் ஓர் ஆளும் கட்சி அராஜகம் செய்யலாமா? என்று பொங்கித் தீர்த்திருக்கிறது தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக…. அட ஒரு ஆளுங்கட்சி இப்படி பேசுகிறதா? என்று பதறாதீர்கள்.. நாடாளுமன்றத்தில் தான் இப்படி எதிர்க்கட்சித்தலைவருக்கு வக்காலத்து வாங்கி, வாய் வீங்கிப் போகும் அளவுக்கு பேசிக்கொண்டிருக்கிறது திமுக…. எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்கினால் என்ன வலி என்று இப்போதுதான் புரிகிறதா இந்த விடியா அரசுக்கு?
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாநில எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி கே பழனிசாமி பேசும்போது, மைக் கை ஆஃப் செய்வது, நா வறண்டுபோகும் அளவிற்கு 2 மணி நேரம் புள்ளிவிபரங்களோடு திமுகவின் தில்லுமுல்லுகளை அவர் புட்டுப் புட்டு வைத்தால் அந்த லைவ் – ஐ அலேக்காக கட் செய்வது… எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களை பேசவிடாமல் சபாநாயகரே மாங்கு மாங்கென்று பேசுவது… என்று ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் குரல்வளையையும் நசுக்கிப் பிழிந்துகொண்டிருக்கும் இந்த திமுக, நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தைப் பற்றி க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கிறது.. திமுகவின் இந்த கூத்தைக் கேட்பவர்களுக்கு சிரிப்புத்தான் வரும்..
தான் பேசுவதை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும், போடும் உத்தரவுகளை மக்கள் பின்பற்ற வேண்டும், ஊடகங்கள் கேள்வி கேட்கக்கூடாது, எதிர்க்கட்சிகள் ஊருக்குள்ளேயே இருக்கக்கூடாது, ஒட்டுமொத்தமாக, கப்சுப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் … என, எதேச்சதிகார போக்குடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் எம்பிக்கள் இன்று டெல்லியில் “ஐயோ ஐயோ ஜனநாயகத்தை காணவில்லை” என்று கிணத்தை காணோம் கதையாக ட்ராமா போட்டுக்கொண்டுள்ளது.
மக்களின் வரிப்பணம் வீணாய் போனாலும் பரவாயில்லை, தமிழகத்தில் நீட், என்எல்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை, நாம் அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் ஃபார்முலா போல… ஏற்கனவே, அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்? என்றெல்லாம் பேசிய திமுக இன்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை வைத்து அவை நடவடிக்கைகளை முடக்கி எந்த மசோதாக்களையும் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து அராஜகம் செய்துகொண்டிருக்கிறது.
தமிழக பிரச்சனைகளை மக்களுக்கும் அரசுக்கும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை இருட்டடிப்பு செய்த திமுக, இன்று நாடாளுமன்றத்தில் எம்.பிக்களை களம் இறக்கியிருப்பதன் பின்னணி என்ன ? பெரும்பாலான மசோதாக்கள் விவாதங்கள் ஏதும் இன்றி அப்படியே நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளையில், மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவி வருகிறதா திமுக?தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் திமுக, நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து இரட்டைவேட திமுகவை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
Discussion about this post