தூத்துக்குடி கோவில்பத்து பகுதியில், போலீசாரே போட்டுக் கொடுத்ததால், மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை அரசு அலுவலகத்திலேயே ரவுடிகள் கொலை செய்த சம்பவத்தில், அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, அவர்களது உயிருக்கு பாதுகாப்பு தர முடியாமல் ஸ்டாலின் அரசு திணறுவது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்..
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி என வார்த்தைக்கு வார்த்தை சொல்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்… தினந்தோறும் கொலைகள் அரங்கேறுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை அம்பலமாக்கியிருக்கிறது அரசு அலுவலகத்திலேயே நடைபெற்ற கொடூர கொலைச் சம்பவம்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் அவரை பட்டப்பகலில் அலுவலகத்திலேயே புகுந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளது மணல் மாஃபியா கும்பல்.
திடீரென கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டி சாய்த்ததில் படுகாயமடைந்த லூர்து சாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பத்து மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் ஆற்று மணல் திருட்டு நடந்து வந்த நிலையில் அதனை தட்டிக் கேட்டு கடுமையான நடவடிக்கை எடுத்ததால் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸை கொலை செய்து இருக்கிறது மணல் கொள்ளை மாஃபியா.
அரசு அலுவலர் ஒருவர் ஒழுங்காக பணியாற்றி மணல் கொள்ளையை தடுத்த நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்து பாதுகாப்பு கோரியும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரே, கிராம நிர்வாக அதிகாரி குறித்து மணல் மாஃபியா கும்பலிடமும் போட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் அந்த கொடூர கொலை சம்பவமானது அரங்கேறி இருக்கிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் லூர்து ஃபிரான்சிஸ் புகாரளித்து, பணி மாறுதல் கேட்டபோதும் அவருக்கு பணி மாறுதலையும் தராமல், முறையான பாதுகாப்பையும் வழங்காமல் அலைகழித்துள்ளது ஆளும் விடியா அரசு!
ஏற்கனவே நிகழ்ந்த கொலை முயற்சி குறித்து லூர்து ஃபிரான்சிஸ் புகாரளித்தும் அவரை பாதுகாக்க தவறியதாக பெண் விஏஓ ஒருவர் பேசும் ஆடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இப்படி அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத ஸ்டாலின் அரசு, பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பை வழங்கும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, முக்கியமாக உயிருக்கு பாதுகாப்பு கோரி அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதுகுறித்து திமுக அரசு அக்கறை கொண்டிருந்தால் இந்த படுகொலை நிகழ்ந்திருக்காது என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
இனியாவது, அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பை கொடுக்குமா திமுக அரசு? பணி இடத்திலேயே அரசு அதிகாரிக்கு ஏற்பட்ட இந்த துயர சம்பவம் இனிமேலும் தொடராமல் இருக்க காவல்துறையை ஸ்டாலின் முடுக்கி விடவேண்டும் என்பதே ஒட்டு மொத்த அரசு ஊழியர்களின் அவசர கோரிக்கையாக எழுந்துள்ளது. ஆனால் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா? அல்லது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் திமுக அரசு திணறுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.