ஊழலில் சம்பாதித்த 30ஆயிரம் கோடிரூபாய் பணத்தை நிர்வகிப்பது உதயநிதியும், சபரீசனும்தான் என்று, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஒப்புதல் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், வாரிசுகளால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
’’நிதி மேலாண்மை செய்வது சுலபம்…. இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே… அவர்களையே நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்… அதனால் 8 மாதங்கள் பார்த்தபிறகு முடிவு செய்துவிட்டேன்…. இது ஒரு நிலையான முறை கிடையாது.”
நீங்கள் கேட்ட ஆடியோ பதிவின் தமிழாக்கம்தான் இந்த வசனங்கள். இந்த ஆடியோவில் பேசியிருப்பது தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பும் பி.டி.ஆர். பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர், கடந்த ஓராண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் சேர்த்து விட்டனர் எனும் தகவல் இடம் பெற்றிருந்தது.
தற்போது அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆடியோவும் வெளியாகி உள்ளது. உதயநிதியும், சபரீசனும் சிறிய ஒப்பந்தங்கள் மூலமாக 30 ஆயிரம் கோடி ரூபாயை குவித்திருக்க முடியாது. ஒட்டு மொத்த அமைச்சரவையும் கூட்டுக்கொள்ளை அடித்திருக்க வேண்டும்… அதைவிட ஸ்டாலினும் தனது வாரிசுகளுக்கு துணையாகவே இருந்திருக்க வேண்டும் என்கிறார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.
ஏற்கனவே முதல் ஆடியோ வெளியான நிலையில்தான், சபரீசனுக்கு நெருக்கம் என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தை சார்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில், 3வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆட்சியில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவடைவதற்குள்ளாகவே, உதயநிதியும், சபரீசனும் ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அடிவருடும் அமைச்சர் பெருமக்கள் எத்தனை நூறுகோடிகள் சம்பாதித்திருக்கிறார்களோ? அவை எல்லாம் மக்களின் பணம் தானே? அப்படியானால் திமுக ஆட்சிக்கு வந்ததே தமிழகத்தை சுரண்டி கொழிக்கத்தானா?
ஊழலில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் உதயநிதியும், சபரீசனுமே வைத்துக்கொண்டுள்ளார்கள் என்றும், வாரிசு அரசியலால் திமுக வாடி வதங்கிக் கொண்டிருப்பதையும் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் பிடிஆர்..
பி.டி.ஆர். சொல்வது போல உதயநிதியும், சபரீசனும் 30ஆயிரம் கோடி ரூபாயை ஊழலில் சம்பாதிக்க விட்டு விட்டு ஸ்டாலின் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். காரணம் திமுகவின் அதிகார மையங்கள் என்பது உதயநிதியும், சபரீசனும் தான் என்று சுட்டிக்காட்டு அரசியல் நோக்கர்கள், மகன் மருமகன் என வாரிசுகளின் ஊழல் சதிராட்டத்தால் ஸ்டாலின் தன் ஆட்சியை இழப்பதோடு, திமுக கூடாரமும் காலியாவது திண்ணம் என்கிறார்கள்.
Discussion about this post