நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக பல்வீர்சிங் மீது எஃப்.ஐ.ஆர் பாய்ந்துள்ள நிலையில், பல்வீர்சிங்கை பாதுகாக்க டிஜிபி சைலேந்திரபாபு துடிப்பது குறித்தும், அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துணைபோவது தொடர்பாகவும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்,.
விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி, அவர்களுக்கு NO-பல் பரிசு வழங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங். ரத்தம் சொட்ட சொட்ட பல்லைப் பிடுங்கிய பல்வீர் சிங்கின் குரூரத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது துயர்மிகுந்த செய்தி… இந்த கொடூரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியதும், பிரச்சனையை ஆறப்போடும் நடவடிக்கையாக திமுக அரசு சம்பந்தப்பட்ட பல்வீர் சிங்கையும் அவருக்கு ஒத்து ஊதிய 3 ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது. ஆனால் என்ன நினைத்ததோ, பல்வீர்சிங்கை தவிர்த்து மற்றவர்களுக்கு இடமாற்றம் அளித்து பரிசுகொடுத்திருக்கிறது திமுக. அரசு.
அத்துமீறிய பல்வீர்சிங் மீது வழக்கு பதிவு செய்யாதது குறித்தும், கைது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகவும் தொடர்ந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சி கேள்வி எழுப்பியதையடுத்து, 20 நாட்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்துள்ளது ஆளும் திமுக அரசு. ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இதன்பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்தும் தொடர்ந்து நியூஸ் ஜெ கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது பல்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஆனாலும் அவரை இதுவரை கைது செய்யவில்லை இந்த நிர்வாகத்திறனற்ற திமுக அரசு.
பணி நீக்கம் செய்து தண்டிக்கப்பட வேண்டிய பல்வீர்சிங் மீது இப்போதுதான் எஃப்.ஐ.ஆரே பதிவாகி உள்ளது. பல்வீர் சிங்கை பாதுகாக்க டிஜிபி சைலேந்திரபாபு பகீதர பிரயத்தனங்களை மேற்கொள்வதும், அவரது கம்பு சுற்றலுக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலினும் செயல்படுவதும்தான், பல்வீர்சிங்கை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதில் இவ்வளவு காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
Discussion about this post