சட்டப்பேரவையில் எந்த உறுப்பினரையும் பேசவிடாமல் தடுப்பதும், தான் மட்டுமே தொடர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள சபாநாயகர் அப்பாவு, டிவி விவாத நிகழ்ச்சி பங்கேற்பாளர் போல இருப்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்..
மக்கள் பிரச்சனைகளை பேசவும், கோரிக்கைகளை எழுப்பவும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட, மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் ஒரே இடம் சட்டமன்றம் தான்… ஆனால், அங்கும் மக்கள் பிரதிநிதிகளின் குரல்வளை நசுக்கப்பட்டால் எங்கு செல்வது? சரி அது அரசியல் காழ்புணர்ச்சி என்றுகூட வைத்துக்கொள்வோம், ஆனால், ஒருவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அதிமேதாவித்தனத்தோடு நடந்துகொண்டால் என்ன செய்வது? முறையிடலாம்… ஆனால் முறையிடக்கூடிய இடத்தில் இருப்பவரே அதைச் செய்தால் யாரிடம் சென்று முறையிடுவது?
அட,எம்எல்ஏக்கள் 1 நிமிடம் பேசினால், சபாநாயகர் அப்பாவு 5 நிமிடங்கள் பேசுகிறார்… இது என்ன காலக்கொடுமை என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அங்கலாய்க்கின்றனர் சட்டமன்ற உறுப்பினர்கள்… எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி கேட்க அனுமதி கேட்டால் உக்காருங்க என்று அடக்கிவிடுகிறார். எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, நேரலையையே துண்டித்துவிடுகின்றனர். இது தொடர்பாக எத்தனையோ முறை எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம் செய்தாலும், அதை அரசோ, முதல்வரோ, சபாநாயகரோ கண்டுகொள்வதே இல்லை…
அவ்வளவு ஏன், திமுகவின் கூட்டணி கட்சிக்காரர்களே ஐயா என்ன விட்ருங்க ஐயா என்று கெஞ்சம் அளவிற்கு மொக்கைபோடுகிறார் சபாநாயகர் அப்பாவு… சமீபத்தில்கூட பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன், சபாநாயகர் பேச அனுமதி மறுப்பதாக ஆவேசம் காட்டியிருந்தார்… அதேபோல, மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, வார்த்தைகளை மாத்திச் சொல்லுங்க -என்று பாடாய் படுத்தியிருக்கிறார்… காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையும் சபாநாயகரிடம் இருந்து தப்பவில்லை.. அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்கள் கேள்வி கேட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்வதற்க்கு முன் சபாநாயகரே பதில் சொல்லிவிடுறார் என்று அவை முன்னவர் துரைமுருகனே அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்… சட்டமன்ற உறுப்பினர்களை விட சபாநாயகர்தான் அதிக நேரம் பேசுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.. அதுசரி, அப்பாவு இப்போதுதானே சபாநாயகராக இருக்கிறார்?…. இதற்கு முன் தொலைக்காட்சி விவாதங்களில்தானே கலந்து கொண்டிருந்தார்… அதனாலதான் சட்டசபையையும் தொலைக்காட்சி விவாதம் போல நடத்துகிறாரோ என்று கேள்வி எழுப்புகின்றனர் இதையெல்லாம் உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள்..
தன் தொண்டை வற்ற மக்களுக்காக இரண்டு மணி நேரம் பேசும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நியாயமாக நேரத்தை ஒதுக்கி பேச வாய்ப்பளிக்காமல், திமுக அரசின் அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழ்பாடும் மன்றமாக வைப்பது தான் நடுநிலையான சபாநாயகருக்கு அழகா? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பேச வைத்து, மக்களுக்கான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வழி விடுவாரா சபாநாயகர் அப்பாவு? அல்லது, சாலமன் பாப்பையா போல பட்டிமன்ற நடுவர் போலவோ, விவாதங்களில் கலந்து கொள்ளும் திமுகவின் செய்தி தொடர்பாளர்போலவோ செயல்படுவதை மாற்றிக்கொண்டு, உண்மையான, நேர்மையான சபாநாயகராக தன்னை நிலைநிறுத்துவாரா என்ற ஆசை, வெறும் கானல்நீர்தான் போல.
Discussion about this post