அமைச்சரவையில் வாரிசுகளை உள்ளே சேர்ப்பதும், சர்ச்சைக்குரியவர்களை வெளியே தள்ளுவதும்…
ஊழல் உண்மையை உடைத்துப்பேசியவர்களின் துறையை மாற்றிக்கொடுத்து அடக்கிவைப்பதும், ஊழல் குற்றச்சாட்டில் வாய் திறக்காதவரை இலாகா இல்லாத அமைச்சராக அமர வைத்து அழகு பார்ப்பதும்
என்று 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உள்ளே வெளியே, உள்ளே வெளியே என்று மங்காத்தா கணக்காக அமைச்சரவையை நடத்திக்கொண்டிருக்கிறார், இல்லை இல்லை நடத்தத்தெரியாமல் திக்கு முக்காடிக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
தற்போது மீண்டும் ஒரு இடியாப்பச்சிக்கலில் சிக்கியிருக்கும் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று பூதக்கண்ணாடி கொண்டு காத்திருக்கின்றனர் திமுகவின் உடன் பிறப்புகள்… சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் கள்ளச்சாராய மரணச் செய்தியால் தமிழகமே அதிர்ந்துபோய் அமர்ந்திருக்க, அப்படி கள்ளச்சாராயம் காய்ச்சிய சிலருக்கே நிவாரணம் கொடுத்து வரலாறு படைத்தது திமுக… இந்தச்செய்தியின் வாடை அடங்குவதற்குள், கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி மரூர் ராஜாவுக்கு கேக் ஊட்டி ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஒருவர்….அடேங்கப்பா, ஆனாலும் உங்களுக்கெல்லாம் ரொம்ப தைரியந்தான் ப்பு என்று கவுண்டமணி கணக்காக எல்லாரும் பேசிக்கொண்டிருக்க, இந்த செய்தி எதுவும் நடக்காததுபோல ஆழ்நிலை தியானத்தில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின்..
அட, அதோடு விட்டார்களா? தம்பி, மகன், மருமகன், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வந்தவர் போனவருக்கெல்லாம் ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகளை அள்ளிக் அள்ளிக்கொடுத்து வள்ளல் என்ற பெயர் வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அமைச்சர் மஸ்தான் மீதிருந்த ஆத்திரத்தை அடக்கமுடியாத விழுப்புரத்து விசுவாசிகள் கூட்டமாகத் திரண்டு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் புகார் பத்திரம் வாசித்திருக்கிறார்கள்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திண்டிவனத்தில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கோபம் கொண்ட கட்சி நிர்வாகிகள், அவரை எதிர்த்து சண்டையிட்ட விவகாரமும் முதல்வர் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ரெய்டு ஒருபுறம் நடந்த நிலையில், அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமைச்சர் மஸ்தான் மீது உடன்பிறப்புகள் கொதிப்பில் இருப்பதால் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின்….
ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த சிறுபான்மையினரான நாசரை வெளியேற்றிவிட்டு இசுலாமியர்களின் கோபத்திற்கு ஆளான ஸ்டாலின், தற்போது மஸ்தானை நீக்கப்போகிறாரா? அல்லது, அவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாவாரா? அல்லது அமைச்சர் மஸ்தானை நீக்கினால் சரியப்போகும், சிறுபான்மையினர் வாக்கு வங்கியை தக்க வைக்க ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை கொடுத்து சரிகட்டிவிட நினைக்கிறாரா ஸ்டாலின்?அப்படியான முடிவை எடுத்தால் மீண்டும் நாசருக்கு என்ன துறை கொடுக்கப்போகிறார்? அங்கு மீண்டும் அவர் கல்லெரி வைபவங்களை நடத்தினால் தூக்கம் தொலைத்துவிட்டு நிற்போமே என்று நினைக்கிறாரா ஸ்டாலின்? ஆக, திமுக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப்போகிறதா? என்பதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்திருக்கும் மாபெரும் கேள்வியே
Discussion about this post