அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி மேன்மேலும் வளர வேண்டும்- முதல்வர் பழனிசாமி

மக்களுக்கு பயனுள்ள செய்திகளை ஊடகங்கள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று நியூஸ் ஜெ. தொலைக்காட்சி திகழ வேண்டும் என்றும் அவர் வாழ்த்தி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை வணங்கி தனது உரையைத் தொடங்கினார். அச்சு ஊடகம் தொடங்கி தொழில்நுட்ப வளர்ச்சியால் காட்சி ஊடகம் வளர்ந்தது வரை அவர் விரிவாக விளக்கினார்.

மக்களின் எண்ணங்களை வெளிக்கொண்டு வருவதில், ஊடகங்கள் முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாக கூறிய முதலமைச்சர், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார். பரபரப்புக்காக தெளிவில்லாத செய்திகளை, தவறாக அளிக்காமல், மக்களுக்கு பயனுள்ள வகையில் ஊடகங்கள் செய்திகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, மருத்துவ சிகிச்சைக்கான தொகை அதிகரிப்பு போன்றவற்றை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அளித்ததை நினைவு கூர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 ஆண்டுகளில் 375 பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கியுள்ளதை குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் அறவழியில் நின்று, நடுநிலையோடு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று நியூஸ் ஜெ. தொலைக்காட்சி மென்மேலும் வளர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

 

Exit mobile version