கொரோனா இல்லாத தேசமானது நியூசிலாந்து!!

தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடு நியூசிலாந்து. கடற்கரைகள், பசுமையான இயற்கை வளங்கள் என கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் இந்த நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதல் தொற்று ஏற்பட்டதிலிருந்தே மிகவும் கவனமாகக் கையாண்ட நியூசிலாந்து அரசு, கொரோனா தொற்று கணிசமாக பரவ ஆரம்பித்த போது ஊரடங்கை அமல்படுத்தியது.

மார்ச் 14ம் தேதி 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்திற்குள் வரும் வெளிநாட்டினரை14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட வேண்டுமென உத்தரவிட்டார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன். மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து வெளிநாட்டினர் வர தடை விதிக்கப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி 102 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டபோதே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மூன்றாம் நிலை ஊரடங்கை பிறப்பித்தார். மார்ச் 25 ஆம் தேதியே அத்தியாவசியமில்லாமல் யாரும் வெளியே வரக் கூடாது என நான்காம் நிலை ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்கு வரும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப் பட்டதோடு, இரண்டு வார தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டது.

இவ்வாறு, மக்களின் முழு ஒத்துழைப்போடு ஊரடங்கை சிறப்பாக வழி நடத்தியதால் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் இருந்தது. வெளி நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 50 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட இந்த நாட்டில் ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டு 22 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 17 நாட்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். மக்களின் ஒத்துழைப்போடும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்போடும் தான் இதை சாதிக்க முடிந்தது எனக் கூறியள்ள அவர், நியூசிலாந்தில் கொரோனா இல்லை என்ற சுகாதாரத்துறையின் தகவலைக் கேட்டதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஊரடங்கு இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலைத் தளர்வுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வருவதால் பொதுப்போக்குவரத்தை தொடங்கவும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சில்லரை வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத் தளர்வில் மதுபான விடுதிகள் திறந்திருந்தாலும் நடனமாட அனுமதி கி. அதேபோல் தனியார் நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கானத் தடை தொடர்கிறது.

Exit mobile version