அமெரிக்காவின் நியூயார்க், பென்சிலிவேனியா உள்ளிட்ட மாகாணங்களில் ஐடா புயல் பாதிப்பால் 42 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் தெற்கு மாகாணமான லூயிசியானாவில் ஐடா சூறாவளி காரணமாக பேய்மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு அமெரிக்காவில் ஐடா(IDA) புயல் பாதிப்பால், நியூ ஜெர்சி, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் 90 ஆண்டுகளில் காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்ட்ரல் பார்க், எலிசபெத் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 3 அங்குலம் மழை பெய்து வருவதாகவும், நியூயார்க்கில் இதுவரை இல்லாத அளவுக்கு 8 புள்ளி 41 அங்குலம் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. ஏராளமான குடியிருப்புகள் நீரில் மூழ்கிய நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை, ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.
கனமழையால் நியூயார்க்கில் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைநீருக்கு மத்தியில் விமானங்கள் கிடப்பதும், சாலைகளில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே இருப்பதும் போன்ற காட்சிகள் பருந்து பார்வையில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க், பென்சிலிவேனியா உள்ளிட்ட மாகாணங்களில் ஐடா புயல் பாதிப்பால் 42 பேர் உயிரிழந்த நிலையில், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.