புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து சென்னை காவல்துறை கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நட்சத்திர விடுதிகளில் டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிமுதல் ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 1 மணிக்குள் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி அவை முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நீச்சல் குளங்களுக்கு அருகில் மேடை அமைத்து கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேளிக்கைகளின்போது நீச்சல் குளத்தை மூடி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகமாக குடித்தவர்களை பாதுகாப்பாக அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கவும் கேளிக்கை விடுதிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் மது அருந்திவிட்டு செல்வோர் பத்திரமாக வீடுகளுக்கு செல்ல தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகமான ஊழியர்களை நியமித்து பெண்கள் துன்புறுத்தப்படுவதை கண்காணிக்கவும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் அதிகளவில் பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வைக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் வாகனங்கள் இல்லையென்றால், அதுகுறித்து காவல்துறைக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும் என்றும் இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.