தமிழகத்தின் 710 வட்டங்களில் “ஜல்சக்தி அபியான்’ திட்டக் குழுவின் மூலம் நீர் சேமிப்பு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. அது குறித்து ஓர் சிறப்புத் தொகுப்பைத் தற்போது காணலாம்.
அடுத்தடுத்து பருவமழை பொய்த்ததாலும், மக்கள் நிலத்தடி நீரை எடுப்பது அதிகரித்ததன் விளைவாகவும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கீழிறங்கியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில், பொதுப்பணித்துறை, ஆயிரத்து 139 வட்டங்களில் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் இருந்து, 429 வட்டங்கள் பாதுகாப்பான நீரைப் பெற்றிருந்தது தெரிய வந்தது. அதே சமயம், மிகவும் அபாயகரமான நிலையில் 358 வட்டங்கள் உள்ளதும், அபாயகரமான நிலையில் 105 வட்டங்கள் உள்ளதும், அபாயமாக வாய்ப்புள்ளதாக 212 வட்டங்கள் மாறி வருவதும், 35 வட்டங்களில் நீரானது உப்புத் தன்மையோடு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்தில் குடிநீர் பிரச்னையைப்போக்க நீர் சேகரிப்புத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு, ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை உருவாக்கியது. அதன்படி தமிழகத்தில் 710 வட்டங்களில் நீர் சேகரிப்புத் திட்டங்களை தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. இது தொடர்பாக ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினருக்கு பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து தமிழகத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்டங்களிலும் ஜல்சக்தி அபியான் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே விரைவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ள 710 வட்டங்களில் பல புதிய நீர் சேகரிப்புத் திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன.
இப்படியாக தமிழகம் முழுவதும் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படும் போது, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர் வளமும் மேம்பாடு அடையும்.