சேலம் – கரூர், கோவை – பழனி, கோவை – பொள்ளாச்சி இடையே 3 புதிய ரயில்களின் சேவை இன்று தொடங்க உள்ளது.
கடைக்கோடியில் உள்ள பகுதிகளுக்கும் போக்குவரத்துக்கு வசதி செய்யும் வகையில் நாட்டின் பத்து வழித்தடங்களில் இன்று ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் சேலம் – கரூர், கோவை – பழனி, கோவை – பொள்ளாச்சி ஆகிய தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சேலம், கோவை, பொள்ளாச்சி நகரங்களில் இதற்கான விழா நடைபெறுகிறது.
கரூரில் பகல் 11.40 மணிக்குப் புறப்படும் ரயில், பிற்பகல் 1.25 மணிக்குச் சேலத்துக்குச் சென்று சேரும். சேலத்தில் 1.40 மணிக்குப் புறப்படும் ரயில் 3.25 மணிக்குக் கரூர் சென்றடையும். ஞாயிறு தவிர வாரத்தின் 6 நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில் வாங்கல், மோகனூர், நாமக்கல் களங்காணி, ராசிபுரம், மல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பழனியில் பகல் பத்தே முக்கால் மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.10 மணிக்குக் கோவைக்குச் சென்றடையும். கோவையில் இருந்து பிற்பகல் ஒன்றே முக்கால் மணிக்குப் புறப்படும் ரயில் மாலை 4.40 மணிக்குப் பழனி சென்றடையும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
கோவையில் இருந்து அதிகாலை ஐந்தே முக்கால் மணிக்குப் புறப்படும் ரயில் காலை 7 மணிக்குப் பொள்ளாச்சி சென்று சேரும். பொள்ளாச்சியில் இருந்து காலை ஏழரை மணிக்குப் புறப்படும் ரயில் 8.40 மணிக்குக் கோவை சென்று சேரும். ஞாயிறு தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு நிலையங்களில் நின்று செல்லும்.