கொரோனா பரிசோதனையை சில நொடிகளில் மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்கும் புதுவகை கருவியை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி குறித்து இந்த தொகுப்பில் காணலாம். கொரோனா தொற்றை உறுதிபடுத்தும் சோதனைகளில் முதன்மையானது ஆர்.டி பிசிஆர். இந்த முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் நபரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து சளி திரவ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிப்படும் திரவ மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, முடிவுகள் தெரிவதற்கு அதிகபட்சம் 8 மணி நேரம் வரை ஆகும். மேலும் நபர் ஒருவருக்கு ஆர்டி பிசிஆர் சோதனை மேற்கொள்வதற்கான செலவும் அதிகமாக உள்ளது. இதனால் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு பதிலாக மாற்று முறையை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்ட நாடான சீனா, சில நிமிடங்களில் கொரோனா தொற்றை உறுதிபடுத்தும் ரேபிட் கிட் கருவிகளை கண்டுபிடித்தது. ஆரம்பத்தில் இந்த கருவிகளை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆர்வத்துடன் வாங்கின. ஆனால் தவறான பரிசோதனை முடிவுகளை தந்ததால் இக்கருவிகளை பயன்படுத்தும் முடிவை உலக நாடுகள் கைவிட்டன.
இந்நிலையில் தற்போது இஸ்ரேல் வடிவமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கருவி, சில நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது. கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரிடம் ஒரு ஆய்வக குப்பி வழங்கப்படுகிறது. குப்பியில் உள்ள திரவத்தில் வாயை நன்றாக கொப்பளித்து மீண்டும் குப்பியில் உமிழ வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் திரவமானது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரத்தில் வைத்து கணித முறைப்படி ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வில் 95 சதவீத முடிவுகள் துல்லியமாக உள்ளதாக கருவியை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிய கருவியின் மூலம் சோதனையின் முடிவுகள் சில நொடிகளில் வெளியாவதால், கால தாமதம் பெருமளவு குறைகிறது. இதனால் கொரோனா பரவலை வெகுவாக குறைக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். போதிய நிதியின்மையாலும், கருவிகள் பற்றாக்குறையாலும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இயலாமல் உள்ள ஏழை நாடுகளுக்கு இந்த கருவி சிறந்த மாற்றாக அமையும். தற்போது பரிசோதனையில் உள்ள இந்த கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது