அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலையால் கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டது. கேரள மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த அழுத்த நிலை காரணமாக தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாகத் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குள் படிப்படியாக தீவிரம் பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக உருவெடுக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version