தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற புதிய ஒற்றை இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, காவல்துறைக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்பு படைக்கு 101, சுகாதாரத் துறையினருக்கு 108, பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்று வந்தனர். இந்நிலையில், இவை அனைத்திற்கும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சேவைகளை பெறும் வகையில், 112 என்ற புதிய சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய தொலைபேசி சேவை, முதல்கட்டமாக இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது தமிழகம், ஆந்திரம், உத்ராகண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண் சேவை தொடக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அடுத்த ஆண்டுக்குள் 112 எண் சேவை, நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.