தமிழகம் முழுவதும் 141 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையம் அரசு பள்ளியில், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 4 வகுப்பறைகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நபார்டு நிதியுதவியுடன், கோவை, ஈரோடு, கரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு பள்ளிகளில், 54 கோடியே 61 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 160 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 33 ஆய்வக கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை அவர் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ், நாகை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளில், 89 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதே போல டி.என்.பி.எஸ்.சி மூலம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 62 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.