தேசிய அளவில் பயணிக்கும் கனரக சரக்கு வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் அதை விரைவில் அமல்படுத்த உள்ளது.
நேஷனல் பர்மிட் உள்ள கனரக வாகனங்கள், டேங்கர் லாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டேங்கர் லாரிகள் முழுவதும் கட்டாயம் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், அதன் பக்கவாட்டுகளில் பிரதிபலிக்கும் வெள்ளை நிற ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கனரக சரக்கு லாரிகள் காக்கி நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும், அதன் பின்புறம் தேசிய அளவில் பயணிக்கும் உரிமம் பெற்றதற்கான என்.பி. குறியீட்டை பெரிய எழுத்தில் வெள்ளை நிறத்தில் எழுத வேண்டும் என்றும், லாரிகளுக்கு கட்டாயம் 2 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான எஃப்.சி. சரிபார்த்தல் ஆண்டின் தொடக்கத்தில் அமைய வேண்டும்,சரக்கு வாகனங்கள் சரக்குகளை திறந்த நிலையில் எடுத்துச் செல்லக்கூடாது, குறைந்த பட்சம் தார்பாய்களால் மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ள போக்குவரத்து துறை அமைச்சகம், ஓட்டுனர் உரிமம், வாகன சான்றிதழ்கள் அனைத்தும் காகிதங்களாகவும் ஸ்மார்ட் சிஸ்டம் முறையிலும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.