கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலால் அறிவிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகளுக்கும், பிற மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களிலும் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், கட்டாயமாக கிருமிநாசினியையும், உடல் வெப்பநிலை பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசங்கள் அணியாமல் வரும் ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில், தகுதியுடைய நபர்கள் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையேயான, அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஆகிய பகுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் கடைகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்அரங்குகளில் செயல்படும் அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்குகள் மற்றும் மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி போட்டிகள் நடத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்களில் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சி அரங்குகள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ, டாக்ஸி மற்றும் வாடகை வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.