தேனி, போடி நகரில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மற்றும் போடியில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

தேனி மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி நகரில் 5 வார்டுகள், பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி, போடி நகரில் அனைத்து பகுதிகளும் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் இன்று முதல் 15 நாட்களுக்கு மருந்து கடைகள், பால் விநியோகம் தவிர பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தடையை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், நத்தம் பகுதியில் 10 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 23 கிராம ஊராட்சிகளில் நாளை முதல் வரும் 20ம் தேதி வரை, முழு ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில், வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகளை ஒருவாரத்துக்கு மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மார்க்கெட்டின் முக்கிய பகுதியான தெற்கு பஜார் கிருஷ்ணன் கோயில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Exit mobile version