ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு புதிய சிக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி அரசுத்தரப்பு சாட்சியமானால் அது கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன மாதிரியான சிக்கலை ஏற்படுத்தும்? – பார்ப்போம்…

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், 2007ஆம் ஆண்டில் விதிமுறைகளை மீறி 305 கோடி ரூபாய்க்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது.

இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக தனது தந்தையும், அப்போதைய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் பெயரைப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் அவர் கைதாகி ஜாமினில் வெளிவந்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக உள்ள இந்திராணி முகர்ஜி அரசுத் தரப்பு சாட்சியமாக மாறினால், கார்த்தி சிதம்பரமும் அவரோடு தொடர்புடைய பலரும் இவ்வழக்கில் கைதாக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

Exit mobile version