கொரோனா விவகாரத்தில் தொடக்கம் முதலே சீனா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது அமெரிக்கா. அத்துடன் சீனாவை தனிமைப்படுத்தவும், பிற நாடுகளை சீனாவுக்கு எதிராக ஒன்று திரட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது.அதற்கு உதவும் வகையில் தற்போது 18 அம்சத் திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செனட் உறுப்பினர் தாம் டிலிஸ் இந்த திட்டங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி, பசிபிக் பிராந்தியத்தில் வலிமையை அதிகரிக்கவும், ராணுவத்திற்கு தேவையான 20 பில்லியன் டாலர் நிதியை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடனான ராணுவ உபகரணங்கள் விற்பனையை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் தனது ராணுவ பலத்தை மீண்டும் கட்டமைக்க உதவுவது, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் ராணுவ உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும், சீனா உடனான வர்த்தக சங்கிலியை துண்டிக்க வேண்டும் எனவும் அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்த சீன அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், வைரஸ் பரவல் தொடர்பான விசாரணையை அமெரிக்கா நடத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றும்படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் வேண்டுகோள் விடுக்கும்படி ட்ரம்ப் அரசுக்கு அந்த திட்ட அறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் சீனாவிற்கு ஆதரவாக செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தும்படியும், சீன அரசால் நடத்தப்படும் ஊடகங்களை கண்காணிக்கவும் திட்ட அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள திட்ட அறிக்கை, வளர்ந்து வரும் நாடுகள் மீதான சீனாவின் பொருளாதார அடக்குமுறைகளை அம்பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இத்தனைக்கும் மேலாக, கொரோனா குறித்த விசாரணைக்கு சீனா ஒத்துழைக்காவிட்டால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 18 திட்டங்களும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் சீனாவுக்கான நெருக்கடி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, பொருளாதர தடை விதிக்கப்பட்டால், சீனப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.