மக்களவையில் புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதா நிறைவேற்றம்

பெருகி வரும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1,000 முதல் 2000 வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கினால் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத்தை அதிகரித்து புதிய மோட்டார் வாகனத் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.

Exit mobile version