அதிமுக கொண்டுவந்த புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் நடப்பு ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை மேம்படுத்தும் வகையில், அதிமுக ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.

அதன்படி, தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுகல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஆயிரத்து 650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முதல் கட்டமாக விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில், புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

அதேபோல், திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதியால், நடப்பாண்டில் கூடுதலாக 850 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

ஏற்கெனவே, அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கடாமல் இருக்கும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவப்படிப்பில் 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 434 பேர் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டால் பயனடைந்தனர்.

தற்போது கூடுதலாக 850 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கும் நிலையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் கூடுதல் இடம் கிடைக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version