கொரோனா நோயாளிகளுக்கு அதிகஅளவில் பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் புதிய தொழில்நுட்பம் கொண்ட முகக்கவசத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண முகக்கவசம் அணிவதினால் சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசித்து உடலில் நச்சுதன்மை அதிகரிப்பதாகவும் அதனை தவிர்க்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பேராசிரியர் அசோக்குமார் ஆகியோர் இணைந்து நானோ மாஸ்க் எனப்படும் சிறப்பு முகக்கவசத்தை வடிவமைத்துள்ளனர். இந்த முகக்கவசமானது சுற்றுப்புற காற்றிலுள்ள 20 புள்ளி 9 சதவிகித ஆக்சிஜன் அளவை மின்காந்தவியல் முறையில் 33 சதவிகித அளவிற்கு அதிகரிக்க வழிவகை செய்கிறது. மேலும் நாம் சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிக்காமல் பாதுகாக்கிறது. 100 கிராம் எடைக்கு குறைவானதாகவும், மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலும் வடிவமைக்கபட்டுள்ளது. நோயாளிகளின் உடல்தகுதிக்கு ஏற்றாற்போலும், வயதின் அடிப்படையிலும் அவர்களின் நுரையீரலை பாதிக்காத வண்ணம் ஆக்ஸிஜன் அளவை கட்டுப்படுத்தும் சென்சார் பொருத்தியும் உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.