கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு மண்டல 3 பகுதிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுகளை
சிவப்பு மண்டலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் கட்டுமான பணி மற்றும் தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராம பகுதிகளில் வழக்கம் போல் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என தெரிவித்துள்ளது. கிராமப் பகுதிகளில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டல பகுதிகளில் ஊடகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், செங்கல் சூளைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும், 33 சதவீத ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுய தொழில் செய்வோரின் சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் மண்டல பகுதிகளில் இயக்கப்படும் கார்கள் மற்றும் கால் டாக்சிகளில் ஓட்டுநருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தனி நபரோ அல்லது வாகனங்களில் செல்லவோ அனுமதிக்கு உட்பட்ட பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுடன் ஒருவர் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மால்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு மண்டலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து தளர்வுகளும் ஆரஞ்ச் மண்டலத்துக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பச்சை மண்டலங்களில் வேறு என்னென்ன பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பச்சை மண்டலங்களில் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக மதுக்கடைகள் மற்றும் பீடா கடைகளை திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி தரப்பட்டுள்ளது. அங்கு ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் நிற்க கூடாது என்றும், 6 மீட்டர் தூரத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத பேருந்துகள், 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை மண்டல பகுதிகளில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அனைத்து வகையான பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி தரப்பட்டுள்ளது.