சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு இயக்கப்பட உள்ள புதிய விரைவு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு புதிய ரயில் விடப்படுகிறது. திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தினமும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் செல்லும் இந்த ரயில், மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து தினமும் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இதையொட்டி தர்மபுரி ரயில் நிலையத்தில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள விழாவில், காணொலி காட்சி மூலம் மத்தய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைக்கிறார். விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதேபோல எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.இதேபோல நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட உள்ள தாம்பரம் – நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலையும் துவக்கி வைக்கும் பியூஷ் கோயல், மொரப்பூர் – தர்மபுரி இடையிலான புதிய வழித்தடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின்நிலையம், நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள 150 மெகாவாட் சூரிய ஒளிசக்தி நிலையம் ஆகியவற்றையும் அவர் துவக்கி வைக்கிறார். மாலை 5.30 மணியளவில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவிலும் கலந்து கொள்கிறார்.