பேரிடர் மேலாண்மைத்துறையில் தமிழக அரசு புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரிடர் உதவிப்படை மற்றும் சிறப்புப்படையினை தொடக்கி வைத்து அவர் பேசினார்.அப்போது, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு 4,399 இடங்கள் வெள்ள பாதிப்பு இடங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.மக்கள் அறியாமையால் ஏரி மற்றும் வெள்ள பாதிப்பு இடங்களில் வீடுகளை கட்டுவதாக கூறிய அவர், பின்னர் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக அரசு மீது குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் பேரிடர் மேலாண்மைத்துறையில் புதிய அத்யாயம் படைக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.1,119 இடங்களில் 100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட பணிகள் பெரும்பாலானவை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு பல பகுதிகள் பாதிப்பில்லாத இடங்களாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளில்லாத விமானங்கள் மூலம் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்படுவதாகவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.