புதிய கல்விக் கொள்கை நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையில், உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தாய் மொழியில் கல்வி கற்றலால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை என்றும், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இடைவெளியை குறைக்க தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினார். விவாதித்தல், ஆராய்தல் அடிப்படையிலானது தான் புதிய கல்விக் கொள்கை என குறிப்பிட்ட அவர், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை தயாராக வைத்திருப்பதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நமது முந்தைய கல்வி முறை நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது என்றும், புதிய கல்விக் கொள்கையானது எப்படி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். புதிய கல்வி கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை என்றும்,
அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்ட பிறகே கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.