ரஃபேல் தொடர்பான வழக்கில் புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம்

ரஃபேல் தொடர்பான வழக்கில் புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பிரான்சுடன் இந்தியா மேற்கொண்ட ரபேல் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணையை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த மறுஆய்வுக்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மத்திய அரசின் ஆட்சேபனையை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், ரஃபேல் போர் விமானம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஆவணங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பான வழக்கில் புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்துவித ஆவணங்களின் அடிப்படையில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், மறு ஆய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version