காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் விவகாரங்களை கையாள புதிய துறை உருவாக்கம்

புதிதாக உதயமாகியுள்ள ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலுள்ள சில பகுதியை ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த அக்டோபர் 31 முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய யூனியன் பிரதேசங்கள் தொடார்பான அனைத்து விவகாரங்களையும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், லடாக் விவகாரங்கள் துறை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து விவகாரங்கள் துறை கவனிக்கும் என்றும் கூறியுள்ளது. 1990ல் இயற்றப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம், ஜம்மு-காஷ்மீர், லடாக் விவகாரங்கள் துறைக்கு மாற்றப்படுவதாகவும், இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை ஆயுதப் படைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இந்தச்சட்டம் அமல்படுத்தப்பட்ட இடங்களில் சோதனையிடவும், சந்தேகப்படும் நபர்களைக் கைது செய்யவும் ஆயுதப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version