மக்களவை தேர்தலையொட்டி, வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது.
சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பை அதிகமானோர் பயன்படுத்திவருகின்றனர். இந்தநிலையில், தேர்தல் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது. அதில், தனி நபரின் அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குழுவை தொடங்க முடியாது என்றும், வாட்ஸ் அப் குழு தொடங்குபவர்கள், தனிநபரை குழுவில் சேர்க்க முயற்சிக்கும் போது, அவரின் அனுமதி பெற்றே சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை 5 பேருக்கு மேல் ஃபார்வேடு செய்ய முயற்சித்தால், வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படும் என்று எச்சரித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், சந்தேகத்திற்குரிய செய்திகளை 9643000888 என்ற எண்ணுக்கு பயனாளிகள் புகார்களை அனுப்பலாம் என்று கூறியுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மொழிகளில் வீடியோக்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்களை சோதனைக்காக அனுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவை தொடர்பு எண், இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது