இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த நியமனம் செய்துள்ளார்.
1980-ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சுனில் அரோரா தேர்வு செய்யப்பட்டார். நிதி, ஜவுளித்துறை, திட்ட ஆணையம் உள்ளிட்ட துறைகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். அரசு அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தில் உதவி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி பதவியேற்க உள்ளார்.