பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 43 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனைகள் நடத்தி வந்த நிலையில், மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவையில் தற்போது 52 அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில், இதர பிற்படுத்தபட்டோர் சமூகத்தை சேர்ந்த 27 பேருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் 12 பேருக்கும், பழங்குடியினர் சமூகத்தில் 8 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர்கள் 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இருந்தும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதன்படி, ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்த சோனவல், நாராயன் ரானே, பசுபதி பராஸ், அனுபிரியா படேல், பங்கஜ் சவுத்ரி, ரிடா பகுகுணா ஜோஷி, ராம்ஷங்கர் கதேரியா, வருண், ஆர்சிபி சிங், லல்லன் சிங் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவர்கள், அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரதமர் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு விரைந்தனர்.