தமிழகத்தில் காவல் மற்றும் தீயணைப்பு துறையில், 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோல், மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மாநில செயல்பாட்டு மையத்தையும், பெரும்பாக்கம், மகுடஞ்சாவடி, பாச்சல் பகுதிகளில் 7 கோடியே 10 லட்சம் மதிப்பில் காவலர் குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், திருச்சி மாவட்டங்களில் காவல்துறை கட்டடங்கள் மற்றும் நாகை, திருச்சி மாவட்டங்களில் தீயணைப்புத்துறைக்கான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத்தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை முதலமைச்சரிடன் வழங்கப்பட்டது.
அதனைதொடர்ந்து, மதுரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய, சேமிப்புக் கிடங்கை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 47 கோடியே 36 லட்சம் மதிப்பில், வேளாண் துறைக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர், வேளாண் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 23 டிராக்டர்கள் மற்றும் இயந்திர வாகனங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.